1.7.1957 வரை தமிழ்நாட்டில் மின் உற்பத்தி விநியோகம் ஆகிய பணிகளை அரசின் ஒரு துறையாக இருந்த மின்சார இலாகா (Electricity Department) மேற்கொண்டு வந்தது. மின்சார துறையின் பணிகள் விடுதலை பெற்ற நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றதாக இல்லை என்று உணர்ந்த மைய அரசு அந்த துறையின் கட்டமைப்பை ஒர அரை அளவிலான சுய அதிகாரம் படைத்த வாரியமாக அமைப்பது என முடிவெடுத்து இதற்கென The Electricity Supply Act என்ற ஒரு சட்டத்தை 1948ம் ஆண்டு நிறைவேற்றியது. இந்த சட்டத்தின்படி தமிழ்நாட்டில் 1.7.1957ல் மின்சார வாரியம் அமைக்கப்பட்டு பழைய மின்சார இலாகாவின் பணிகள் அனைத்தும் மின்சார வாரியத்திற்கு மாற்றப்பட்டது.
மின்சார வாரிய ஊழியர்கள் அரசு ஊழியர்கள் அல்ல என்ற நிலை பிறந்த பிறகுதான் வாரிய தொழிலாளர்கள் 1926ம் ஆண்டு தொழிற்சங்க சட்டத்தின் கீழ் தொழிற்சங்கம் அமைத்துக்கொள்ளும் உரிமைகள் கிடைத்தது.
பைக்காரா திட்டத்தில் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த திரு.ஜி.கே.பக்கிரிசாமி அவர்கள் எழுத்துப்பிரிவு ஊழியர்களுக்கென மாநிலந்தழுவிய சங்கம் ஒன்றினை அமைப்பது என முடிவெடுத்து அதற்காக Accounts Subordinates Union என்ற பெயரில் சங்கம் ஒன்றை பதிவு செய்திட பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
சங்கத்தை பதிவு செய்யும் விண்ணப்பம் கீழ்கண்ட ஏழு மூத்த உடன்பிறப்புகளால் கையொப்பமிடப்பட்டு தொழிலாளர் துறை ஆணையருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
மேற்கண்ட பொறுப்பாளர்கள் மேற்கொண்ட தொடர்முயற்ச்சிகளின் காரணமாக அன்றைய தொழிலாளர் துறை ஆணையர் மரியாதைக்குரிய திரு.பாலசுந்தரம். இ.ஆ.ப., அவர்களின் ஒப்புதலுடன் "தமிழ்நாடு மின்கழக கணக்காயர் சங்கம்" என்ற பெயரில் நமது சங்கம் 27-04-1958 அன்று பதிவு செய்யப்பட்டு (பதிவு எண்.2472) அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
கணக்குப்பிரிவு ஊழியர்களுக்காக பதிவு செய்யப்பட்டு அந்த பிரிவு ஊழியர்களின் பாதுகாப்பு முன்னேற்றம் ஆகியவற்றை இலட்சியங்களாகக்கொண்டு செயல்படடுவந்த கணக்காயர் சங்கம் ஒட்டு மொத்த மின்துறை ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் கூட்டமைப்பு "Tamil Nadu Electricity Workers Federation" என்ற ஓரு அமைப்பை ஏற்படுத்திட முன்முயற்சி எடுத்து 23-02-1958 அன்று சென்னை மெமோரியல் ஹாலில் அதனது துவக்க விழாவையும் மாநாட்டையும் நடத்தியது.
தீப்பேறு காரணமாக சம்மேளனப் பொறுப்பாளர்களுக்கும் கணக்காயர் சங்கப் பொறுப்பாளர்களுக்கும் உருவான கருத்துவேறுபாடு காரணமாக 1960ம் ஆண்டு பழனியில் கூடிய நமது சங்க பொதுக்குழுவில் சம்மேளனத்தைவிட்டு வெளியேறுவது என தீர்மானித்தது.
ஏறத்தாழ ஏழாண்டு காலம் அன்றைய ஆட்சியாளர்களின் ஆசியோடு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட்ட மின்சார வாரிய நிர்வாகத்தோடு தொடர்ந்து போராடிய சங்கத்தின் பொறுப்பாளர்கள் பணிநீக்கம், ஊர்மாறுதல், ஒழுங்கு நடவடிக்கை ஆகியவைகளுக்குட்படுத்தப்பட்டனர்.
1967ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தலில் பெரும்பான்மை மக்களின் பேராதரவோடு ஆட்சிப்பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில்தான் மின்சாரத் தொழிலாளர்கள் குறிப்பாகவும் கணக்காயர் சங்கம் சிறப்பாக பல்வேறு உரிமைகளையும் முன்னேற்றங்களையும் பெற்றது என்பதை மறுக்கவோ மறக்கவோ முடியாது.
எழுத்துப்பிரிவிற்கு கண்காயர் சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்ப்புகளையும் மீறி B.P.Ms.No.1238 dated 30.07.1969 வாயிலாக நமது சங்கத்திற்கு தொழிற்துறை ஒழுங்கு விதிகளின் கீழ் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து கணக்குப்பிரிவினை மட்டுமே உள்ளடக்கி செயல்பட்டுவந்த கணக்காயர் சங்கத்தை அனைத்துபகுதி மின்தொழிலாளர்களையும் ஒருங்கினைத்து செயல்படுகின்ற வகையில் 20-05-1979 அன்று திருச்சியில் நடைபெற்ற சங்கத்தின் பொதுக்குழுவில் கணக்காயர் சங்கத்தின் பெயரை கணக்காயர் களத்தொழிலாளர் சங்கம் என மாற்றி அனைத்து பணித்தொகுப்பு ஊழியர்களையும் பிரதிநிதித்துவம் துணைவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டது.
சங்கத்தின் பெயரையே மாற்றியதையே காரணமாகக்கூறி அன்றைய மின்சார வாரிய நிர்வாகம் கணக்காயர் சங்கத்திற்கு வழங்கிய அங்கீகாரத்தை B.P.Ms.No.269 dated 24-11-1979 வாயிலாக இரத்து செய்து ஆணைபிறப்பித்தது.
நீண்ட சட்ட போராட்டத்திற்குப்பின் மேற்கண்ட வாரிய ஆணை சென்னை உயர்நீதி மன்றத்தால் இரத்து செய்யப்பட்டு B.P.Ms.No.596 dated 05-11-1980 வாயிலாக சங்க அங்கீகாரம் மீட்கப்பட்டது.
1958ம் ஆண்டு கணக்குப்பிரிவு பணித்தொகுப்பு ஊழியர்களின் பாதுகாப்பு, முன்னேற்றம் நல்வாழ்விற்காக துவக்கப்பட்ட கணக்காயர் சங்கம் 1979ம் ஆண்டு மின்துறையைச் சார்ந்த அனைத்து பணித்தொகுப்பு ஊழியர்களுக்காகவும் செயல்படதுவங்கிய பின் வாரியத்தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக வாதாடி, போராடி தேவைப்படும் நேரங்களில் சட்டபூர்வமான நடவடிக்கைகள் வாயிலாகவும் பெற்றிட்ட பல்வேறு உரிமைகளையும் சலுகைகளையும் பட்டியலிட்டால் அது மிக நீண்டதாகும். அந்த வரலாறு இன்றும் தொடர்கிறது.